18-02-2025 தேய்பிறை சஷ்டி முருகர் வழிபாடு

கலியுகத்தில் கண் கண்ட தெய்வமாக விளங்குபவர் முருகர். தமிழ்க் கடவுளாக விளங்கும் முருகப் பெருமானை போற்றி வணங்க பல விரத நாட்கள் மற்றும் விழா நாட்கள் உள்ளன. தினமும் அவரை வணங்குவதும் சிறப்பு. முருகன் அருள் இருந்தால் தீவினை யாவும் தீர்ந்து விடும் என்பார்கள். வந்த வினையும் வருகின்ற வல் வினையும் கந்தன் எனக் கூறின் காணாமல் போகும். அத்தகு சிறப்பு வாய்ந்த முருகனுக்கு உகந்த நாளாக செவ்வாய்க்கிழமை உள்ளது. நாளை செவ்வாய்க்கிழமை. முருகப் பெருமானுக்கு உரிய நாள். அது மட்டும் அன்றி நாளை தேய்பிறை சஷ்டி. சஷ்டி திதியும் முருகனுக்கு உகந்த திதி. முருகனுக்கு உரிய நாளும் திதியும் சேர்ந்து வரும் நாளில் உங்கள் வல்வினை யாவும் தீர அவரை வணங்க வேண்டும்.

தேய்பிறை வழிபாடு

பொதுவாக நம் சங்கடங்கள் யாவும் தீர தேய்பிறை வழிபாடு சாலச் சிறந்தது. இன்றைய நாளில் கஷ்டம் இல்லதாவர் எவருமே இல்லை என்று கூறிவிடலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினை. வேலை கிடைக்க வேண்டும். திருமணம் ஆக வேண்டும். குழந்தை பிறக்க வேண்டும், குடும்பத்தில் நல்லுறவு இருக்க வேண்டும் என இன்னும் பல ஆசைகள் நமக்குள் இருந்தாலும் இவற்றை அடைவதில் நாம் சிரமங்களையும் சிக்கல்களையும் சந்திக்க நேர்கிறது.  

முருகனுக்கு செய்ய வேண்டிய பரிகாரம்.

உங்கள் கஷ்டங்கள் யாவும் தீர கீழே உள்ள இந்த பரிகாரத்தை மேற்கொள்ளுங்கள். உங்கள் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு செல்லுங்கள். செவ்வாய்க்கிழமை என்பதால் இந்த பரிகாரத்தை செவ்வாய் ஓரையில் செய்வது நன்று. நாளை சூரிய உதயத்தில் இருந்து முதல் ஒரு மணி நேரம் செவ்வாய் ஓரை இருக்கும். அதே போல இரவு எட்டு மணிக்கு செவ்வாய் ஓரை வரும். ஆறுமுகனுக்கு உரிய எண் ஆறு. எனவே ஆறு அகல் விளக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நெய் ஊற்றி சிகப்பு நிறத் திரியை போட்டுக் கொள்ளுங்கள். விளக்கு ஏற்றுங்கள். முருகனுக்கு செவ்வரளி பூக்களை வாங்கி கொடுத்து விட்டு, முருகன் கோவிலில் 6 முறை வலம் வர வேண்டும்.

விளக்கு ஏற்றும் போது சொல்ல வேண்டிய முருகர் மந்திரம்

“தீப மங்கள ஜோதீ நமோ நம! தூய அம்பல லீலா நமோ நம! ஞான பண்டித ஸாமீ நமோநம! அருள்தாராய் “

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் இருந்து எடுக்கப்பட்ட ஜோதி மந்திரம் தான் இது. தூய மனதோடு விளக்கு ஏற்றும் போது முருகனை மட்டும் மனதில் நினைத்து இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

எந்த அளவுக்குதீபம்  ஏற்றி வழிபாடு செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களுடைய வீட்டில் இருள் என்னும் கஷ்டம் விலகும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை மட்டுமல்ல தினம் தோறும்  ஆலயம் செல்ல முடியாவிட்டால் கூட வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும். தினம் தோறும் வீட்டில் விளக்கு ஏற்றும் போது முருகப்பெருமானை நினைத்து இந்த மந்திரத்தை சொன்னால் கூட தவறு கிடையாது. மந்திரத்தை உச்சரிக்க எண்ணிக்கை அவசியம் கிடையாது.

உங்களால் எத்தனை முறை மந்திரத்தை உச்சரிக்க முடியுமோ, அத்தனை முறை இந்த மந்திரத்தை தினம்தோறும் உச்சரிக்கலாம். வாழ்க்கையில் இருக்கும் இருள் நீங்கும். பிரகாசமான வாழ்க்கை கிடைக்கும் வெற்றி மேல் வெற்றி குவியும். முருகப்பெருமானின் அருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்தனை செய்வோம்